×

ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம்: கொடைக்கானலில் 5 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு

 

கொடைக்கானல்: நாடாளுமன்ற தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் வந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ல் நடக்கிறது. அதுவரையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் சுட்டெரிக்கும் கோடை வெயில் மற்றும் தண்ணீர் பிரச்னையை சமாளிப்பது ெதாடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்த முதல்வர், இதற்ெகன ரூ150 கோடியை ஒதுக்கி திட்டங்களையும் அறிவித்தார். தேர்தல் நேரத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

காலையில் நடைபயிற்சியின்போது வாக்கு சேகரிப்பு, உழவர்சந்தைகளில் பிரசாரம், பொதுமக்களுடன் சந்திப்பு மாலையில் ெபாதுக்கூட்டம் என நாளின் பெரும்பகுதி முழுவதும் பிரசாரத்திற்காக செலவிட்டார். வாக்குப்பதிவு முடிந்ததும், முதல்வரின் தேர்தல் கால களப்பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிலையில், ஓய்வு எடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். இதற்காக நேற்று காலை சென்னை, ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து குடும்பத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் சென்றார். அங்கிருந்து காலை 9.10 மணி அளவில் விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றார்.

காலை 10.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இறங்கியவர், அங்கு தயாராக இருந்த காரில் ஏறி, சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு பகல் ஒரு மணிக்கு சென்றார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் முதல்வரை வரவேற்க வரவில்லை. ஐந்து நாள் பயணமாக தனது குடும்பத்துடன் கொடைக்கானல் வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வந்துள்ளனர். மே 3ம் தேதி வெள்ளிக்கிழமை வரை முதல்வர் கொடைக்கானலில் தங்கி இருக்கிறார். அப்போது, சில சுற்றுலா பகுதிகளுக்கு முதல்வர் செல்ல திட்டமிட்டுள்ளார். கொடைக்கானலில் இருந்து மே 4ம் தேதி சனிக்கிழமை மீண்டும் சென்னை வருவார் எனத் தெரிகிறது. முதல்வரின் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு அங்கு டிரோன் பறக்கத் தடை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2021ல் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் வந்து தங்கி ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது. 3 ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் கொடைக்கானல் வந்துள்ளார். முதல்வர் வருகையையொட்டி கொடைக்கானல் பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முதல்வர் கொடைக்கானலில் 5 நாள் தங்கி இருப்பதால், கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்லவோ அல்லது சுற்றிப்பார்க்கவோ கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. வழக்கமாக பணிகளில் சுற்றுலா பயணிகள் தங்கு தடையின்றி செல்லலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு சென்று முதல்வர் பார்வையிட உள்ளார்.

The post ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம்: கொடைக்கானலில் 5 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Kodaikanal ,M.K.Stalin ,Tamil Nadu ,Puducherry ,M.K.Stal ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...